search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி மருத்துவமனை"

    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளை வற்புறுத்தி லஞ்சம் வாங்குவதாக பணியாளர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    நெல்லையைச் சேர்ந்தவர் வக்கீல் ஜாபர்அலி. தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை பொதுச்செயலாளரான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஒவ்வொரு பணிக்கும் நோயாளிகளை வற்புறுத்தி பணம் வாங்குவதாக எங்கள் அமைப்புக்கு புகார்கள் வந்தன. ஸ்கேன், எக்ஸ்-ரே, ரத்த பரிசோதனை போன்றவற்றுக்கு பணம் கொடுத்தால் தான் உடனடியாக வேலை நடக்கிறது என்றும் புகார் கூறப்பட்டது. எங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் புற்றுநோய்க்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இதை கண்கூடாக பார்த்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும், மருந்து, மாத்திரையும் வழங்க வேண்டியது அரசின் கடமை. இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்ய அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்புக்குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், குழுக்கள் அமைக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மருத்துவ சேவையை பெற முடியும் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவது, தாமதப்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் சம்பந்தமாக மருத்துவக்கல்வி இயக்குனர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×